மகிழன், அம்மா அப்பா பேச்சைக் கேட்டு நடக்கும் நல்ல பையன். எட்டாம் வகுப்பு படிக்கிறான். அதிர்ந்து பேசாதவன். தொடக்கப் பள்ளியில் படிக்கும் போது பல பரிசுகள் வென்றிருக்கிறான். ஆறாம் வகுப்பிற்காக நடுநிலைப் பள்ளி வந்த பிறகு பெரிதாக அவன் ஏதும் பரிசுகள் வென்றிடவில்லை. ஏழாம் வகுப்பிலும் இதே நிலை தொடர்ந்தது. திறமையானவன் தான். ஆனால் வயதிற்கான விளையாட்டுத்தனம் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழித்தல் போன்ற காரணங்களால் அவனால் வெற்றியாளனாக தொடர்ந்து சோபிக்க முடியவில்லை. இதோ எட்டாம் வகுப்பு முடிய சில மாதங்களே உள்ளன.
மகிழனின் அப்பாவுக்கு எப்போதும் வேலை.. வேலை.. வேலை.. தான். அவர் வீட்டில் இருக்கும் நேரம் மிக மிகக் குறைவு. வருடத்தில் முன்னூறு நாட்கள் வேலை நிமித்தமாக எங்காவது பயணம் மேற்கொண்டிருப்பார். "உங்கள் மகன் எந்த வகுப்பு படிக்கிறான்?", என்று கேட்டால் ஏதோ வினாடி-வினா நிகழ்ச்சியில் கஷ்டமான கேள்வி கேட்கப்பட்டவரைப் போல யோசிப்பார். இப்போது கூட ஏதோ ஒரு ஊருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மகிழனின் அம்மாவுக்கு தன் மகன் எப்பவுமே ஜெயிப்பவனாக இருக்கவேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு பரிசாவது பள்ளியில் இருந்து வென்று வரவேண்டும். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தான் சரியாக கவனம் செலுத்தாததே தன் மகனின் பின்தங்கலுக்கான காரணம் என்று கருதினார். நடுநிலைப் பள்ளியை முடிப்பதற்குள் ஒரு பரிசாவது தன் மகனை வாங்கவைத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார். அச்சமயம் பார்த்து பள்ளியிலிருந்து வந்தது ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி. அந்த அறிவிப்பை கேட்டது முதலே பரபரப்பானார். மகிழனை அந்தப் போட்டியில் கலந்துகொள்ள வலியுறுத்தினார். அலுவலகத்திலிருந்து ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு முழு நேரம் இதற்காக அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். மகிழனுக்குப் பெரிதாக ஆர்வம் இல்லாத போதும் பேச முடியாத நிலை.
"அம்மா, நீங்க என்ன ப்ராஜெக்ட் மனசுல வச்சிருக்கீங்க?", கேட்டான் மகிழன்.
"ரொம்ப கஷ்டம் இல்லப்பா. ஒரு நாய்க்குட்டி ரோபோ செய்யப்போறோம். நாம சொல்ற சில கட்டளைகளை புரிந்து கொள்ளும். அதற்குத் தகுந்தாற்போல் செயல்படும். உதாரணமா, வா, போ, நட, திரும்பு இந்த மாதிரி எளிமையான கட்டளைகள். "
இதைக் கேட்டவுடன் ஆர்வமே இல்லாமல் இருந்த மகிழனுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. கடைக்கு அம்மாவுடன் போய் திட்டப்பணிக்கு வேண்டிய பொருட்களை வாங்கினான். அம்மாவின் உதவியோடு அடுத்தடுத்த வேலைகளை மளமளவென முடித்தான். இரண்டு மூன்று நாட்களில் நாய்க்குட்டி உருவம் பெற்றது. அடுத்து இதை எப்படி உயிர்ப்பித்து, கட்டளைகளைக் கேட்க வைப்பது, செயல்படவைப்பது போன்ற அடிப்படைக் கேள்விகள் தோன்றின. இது பற்றி அம்மாவிடம் பேசிய போது அவர் சொன்ன விளக்கங்கள் அவனுக்கு துளியளவும் புரியவில்லை. அவனுடைய சக்திக்கப்பாற்பட்டது எனப் புரிந்தது. அம்மா சொன்ன சவுண்ட் சென்சார், சாப்ட்வேர், செர்வோ மோட்டார் போன்றவற்றை அவன் கேள்விப்பட்டிருக்கிறானே தவிர அதைப்பற்றிய எந்த அறிவும் அவன் பெற்றிருக்கவில்லை. அம்மா மேலும் மேலும் கொடுத்த விளக்கங்கள் அவனுக்கு அயற்சியையே ஏற்படுத்தின. அவன் பள்ளி சென்ற போதும் அம்மா திட்டப்பணிக்காக வேலை பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவன் திட்டப்பணியில் இருந்து தொலைவுபட்டுப்போனான். ஒரு வழியாக நாய்க்குட்டி தயாராகிவிட்டது. கட்டளைகள் பிறப்பித்து சோதனையும் செய்தாகிவிட்டது. நாய்க்குட்டிக்கு ஹீரோ என்று பெயர் வைத்தனர்.
அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிக்கான நாள். ஹீரோவை எடுத்துக்கொண்டு தன் அம்மாவுடன் பள்ளிக்குப் புறப்பட்டான். அவன் நண்பர்கள் ஹீரோவுக்கு கட்டளைகள் பிறப்பித்து நாய்க்குட்டியுடைய செயல்களை ரசித்தனர். மகிழனுக்கு சந்தோசம் தாளவில்லை. எல்லா மாணவர்களும் போட்டி நடக்கும் அரங்கிற்கு தங்களுடைய கண்டுபிடிப்பை எடுத்து வரும்படி ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வந்தது. அதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் போட்டி நடக்கும் அரங்கிற்கு விரைந்தனர். மகிழனுடைய கண்டுபிடிப்பு தான் அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது. மதிப்பீட்டாளர்கள் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் ஆராய்ந்தனர். கண்டுபிடிப்பு பற்றிய கேள்விகளை மாணவர்களிடம் கேட்டனர். காட்சி நேரம் முடிந்தது. இருபது நிமிடம் கழித்து வெற்றி பெற்ற கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் அரங்கின் இருக்கைகளில் அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் மேடையில் பள்ளி முதல்வர், மூத்த ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் தோன்றினார்கள். வழக்கமான வரவேற்புரை, சிறப்புரைகளுக்குப் பிறகு பரிசு அறிவிப்பதற்கான நேரம் வந்தது. அந்த ஒரு சில வினாடிகள் அரங்கம் முழுவதும் நிசப்தத்தில் மூழ்கியது. அந்த நிசப்தத்தைக் கலைக்கும் விதமாக ஒலிபெருக்கியில் ஒலித்தது அந்த அறிவிப்பு, "முதல் பரிசு பெறும் கண்டுபிடிப்பு "ஹீரோ". எட்டாம் வகுப்பு சி-பிரிவில் படிக்கும் மகிழனை பரிசு பெற மேடைக்கு அழைக்கிறோம்..". மகிழனின் அம்மா அறிவிப்பைக் கேட்டதும் ஏறக்குறைய எழுந்து குதித்தேவிட்டார். மகிழன் பரிசை வாங்கிக் கொள்ள மேடையை நோக்கி ஓடினான். தன் மகன் பரிசு வாங்குவதை மொபைல் காமெராவால் போட்டோ எடுத்துத் தள்ளினார் அம்மா.
நிகழ்ச்சி முடிந்து காரில் வீடு திரும்பும் போது அம்மா தங்களது கண்டுபிடிப்பைப் பற்றி பேசிக்கொண்டே வந்தார். மகிழனுக்கு ஏதும் பேசத் தோன்றவில்லை. வீடு வந்து சேர்ந்ததும் மகிழன் தான் வாங்கிய பரிசை அம்மாவிடம் கொடுத்து, "இந்தங்கம்மா நீங்க ஆசைப்பட்டதை நிறைவேத்திட்டீங்க", என்றான்.
"இதை, நீயே உன் ரூம் ஷெல்ப்பில வச்சுக்கோ", என்றார் அம்மா.
"இல்லம்மா, இது உங்களோடது.. என்னோடாதில்லை. நீங்க ஒரு வாரம் லீவு போட்டு இதுக்காக உழைச்சிருக்கீங்க"
"இதுல உனக்கு சந்தோசம் இல்லையா.. உன்னோட பங்கு இல்லேன்னு நினைக்கிறீயா?"
"அம்மா, தபால்காரர் நம்ம வீட்டுக்கு ஒரு தபால் கொண்டுவந்து கொடுக்குறாரு.. நாம கை தட்டுவோமா? பாராட்டுவோமா? பட்டுவாடா பண்றது அவர் வேலை..அதத்தான் நானும் செஞ்சிருக்கேன். ஹீரோவை பள்ளிக்கூடத்துக்கு எடுத்துட்டுப் போனேன். அங்கே கொடுக்கப்பட்ட பரிசை உங்களிடம் கொடுக்கிறேன். மேடையில் கிடைச்ச பாராட்டும் எனக்கில்லை.. இந்த பரிசில் எனக்கு பங்கும் இல்லை."
வாடிய தன் மகனின் முகத்தை பார்த்து கலங்கிய அம்மா, "நீ இந்த போட்டியில ஜெயக்கனும்னு தானடா நான் ஹெல்ப் பண்ணேன்...", என்றார்.
"அதுதாம்மா தப்பு.. பரிசு வாங்கனும்ம்னு நினைச்சீங்களே தவிர என்னால செய்யமுடியுமான்னு யோசிச்சீங்களா? நான் போட்டில கலந்துக்காதப்ப கூட என் நண்பர்கள் மேடையேறி பரிசு வாங்கும் போது நான் கீழே உட்கார்ந்து கை தட்டும்போது இருந்த சந்தோசம் இப்போ நான் மேடையேறி இந்த பரிசை வாங்கும் போது இல்லையேம்மா. நேர்மையா முயற்சி செஞ்ச இன்னொரு மாணவனின் கண்டுபிடிப்புக்கு கிடைச்சிருக்க வேண்டிய பரிசை நான் குறுக்கு வழில தட்டிப்பறிச்சிட்டேம்மா."
மகிழனின் வார்த்தையில் இருந்த உண்மை அம்மாவை திருப்பிப்போட்டது. வெற்றி மட்டுமே கருத்தாகக் கொண்டு கண்மூடித்தனமாக ஓடுவது வாழ்க்கையல்ல என்று தன் மகன் மூலமாக இன்று கற்றுக் கொண்டார். தன் மகனின் கரம் பற்றி மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மகிழனும் உயர்நிலைப் பள்ளி சென்ற பிறகு அம்மாவின் ஆசையை பூர்த்திசெய்யும் பொருட்டு சாதனைகள் பல செய்யப் போவதாகவும் அதற்காக இன்றிலிருந்தே தன்னை தயார்படுத்திக் கொள்ளப் போவதாகவும் உறுதிபூண்டான்.
No comments:
Post a Comment