Sunday, May 20, 2018

எது பரிசு?



மகிழன், அம்மா அப்பா பேச்சைக் கேட்டு நடக்கும் நல்ல பையன். எட்டாம் வகுப்பு படிக்கிறான். அதிர்ந்து பேசாதவன். தொடக்கப் பள்ளியில் படிக்கும் போது பல பரிசுகள் வென்றிருக்கிறான். ஆறாம் வகுப்பிற்காக நடுநிலைப் பள்ளி வந்த பிறகு பெரிதாக அவன் ஏதும் பரிசுகள் வென்றிடவில்லை. ஏழாம் வகுப்பிலும் இதே நிலை தொடர்ந்தது. திறமையானவன் தான். ஆனால் வயதிற்கான விளையாட்டுத்தனம் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழித்தல் போன்ற காரணங்களால் அவனால் வெற்றியாளனாக தொடர்ந்து சோபிக்க முடியவில்லை. இதோ எட்டாம் வகுப்பு முடிய சில மாதங்களே உள்ளன.

மகிழனின் அப்பாவுக்கு எப்போதும் வேலை.. வேலை.. வேலை..  தான். அவர் வீட்டில் இருக்கும் நேரம் மிக மிகக் குறைவு. வருடத்தில் முன்னூறு நாட்கள் வேலை நிமித்தமாக எங்காவது பயணம் மேற்கொண்டிருப்பார். "உங்கள்  மகன் எந்த வகுப்பு படிக்கிறான்?", என்று கேட்டால் ஏதோ வினாடி-வினா நிகழ்ச்சியில் கஷ்டமான கேள்வி கேட்கப்பட்டவரைப் போல யோசிப்பார். இப்போது கூட ஏதோ ஒரு ஊருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மகிழனின் அம்மாவுக்கு தன் மகன் எப்பவுமே ஜெயிப்பவனாக இருக்கவேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு பரிசாவது பள்ளியில்  இருந்து வென்று வரவேண்டும். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தான் சரியாக கவனம் செலுத்தாததே தன் மகனின் பின்தங்கலுக்கான காரணம் என்று கருதினார். நடுநிலைப் பள்ளியை முடிப்பதற்குள் ஒரு பரிசாவது தன் மகனை வாங்கவைத்துவிடவேண்டும் என்று கங்கணம்  கட்டிக்கொண்டிருந்தார். அச்சமயம் பார்த்து பள்ளியிலிருந்து வந்தது ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி. அந்த அறிவிப்பை கேட்டது முதலே பரபரப்பானார். மகிழனை அந்தப் போட்டியில் கலந்துகொள்ள வலியுறுத்தினார். அலுவலகத்திலிருந்து ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு முழு நேரம் இதற்காக அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். மகிழனுக்குப் பெரிதாக ஆர்வம் இல்லாத போதும் பேச முடியாத நிலை.

 "அம்மா, நீங்க என்ன ப்ராஜெக்ட் மனசுல வச்சிருக்கீங்க?", கேட்டான் மகிழன்.
"ரொம்ப கஷ்டம் இல்லப்பா. ஒரு நாய்க்குட்டி ரோபோ செய்யப்போறோம். நாம சொல்ற சில கட்டளைகளை புரிந்து கொள்ளும். அதற்குத் தகுந்தாற்போல் செயல்படும். உதாரணமா, வா, போ, நட, திரும்பு இந்த மாதிரி எளிமையான கட்டளைகள். "
இதைக் கேட்டவுடன் ஆர்வமே இல்லாமல் இருந்த மகிழனுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. கடைக்கு அம்மாவுடன் போய்  திட்டப்பணிக்கு வேண்டிய பொருட்களை வாங்கினான். அம்மாவின் உதவியோடு அடுத்தடுத்த வேலைகளை மளமளவென முடித்தான். இரண்டு மூன்று நாட்களில் நாய்க்குட்டி உருவம் பெற்றது. அடுத்து இதை எப்படி உயிர்ப்பித்து, கட்டளைகளைக் கேட்க வைப்பது, செயல்படவைப்பது போன்ற அடிப்படைக் கேள்விகள் தோன்றின. இது பற்றி அம்மாவிடம் பேசிய போது அவர் சொன்ன விளக்கங்கள் அவனுக்கு துளியளவும் புரியவில்லை. அவனுடைய சக்திக்கப்பாற்பட்டது எனப் புரிந்தது. அம்மா சொன்ன சவுண்ட் சென்சார், சாப்ட்வேர், செர்வோ மோட்டார் போன்றவற்றை அவன் கேள்விப்பட்டிருக்கிறானே தவிர அதைப்பற்றிய எந்த அறிவும் அவன் பெற்றிருக்கவில்லை. அம்மா மேலும் மேலும் கொடுத்த விளக்கங்கள் அவனுக்கு அயற்சியையே ஏற்படுத்தின. அவன் பள்ளி சென்ற போதும் அம்மா திட்டப்பணிக்காக வேலை பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவன் திட்டப்பணியில் இருந்து தொலைவுபட்டுப்போனான். ஒரு வழியாக நாய்க்குட்டி தயாராகிவிட்டது. கட்டளைகள்  பிறப்பித்து சோதனையும் செய்தாகிவிட்டது. நாய்க்குட்டிக்கு ஹீரோ என்று பெயர் வைத்தனர்.

அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிக்கான நாள். ஹீரோவை எடுத்துக்கொண்டு தன் அம்மாவுடன் பள்ளிக்குப் புறப்பட்டான். அவன் நண்பர்கள் ஹீரோவுக்கு கட்டளைகள் பிறப்பித்து நாய்க்குட்டியுடைய செயல்களை ரசித்தனர். மகிழனுக்கு சந்தோசம் தாளவில்லை. எல்லா மாணவர்களும் போட்டி நடக்கும் அரங்கிற்கு தங்களுடைய கண்டுபிடிப்பை எடுத்து வரும்படி ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வந்தது. அதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் போட்டி நடக்கும் அரங்கிற்கு விரைந்தனர். மகிழனுடைய கண்டுபிடிப்பு தான் அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது. மதிப்பீட்டாளர்கள் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் ஆராய்ந்தனர். கண்டுபிடிப்பு பற்றிய கேள்விகளை மாணவர்களிடம் கேட்டனர். காட்சி நேரம் முடிந்தது. இருபது  நிமிடம் கழித்து வெற்றி பெற்ற கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் அரங்கின் இருக்கைகளில் அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் மேடையில் பள்ளி முதல்வர், மூத்த ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் தோன்றினார்கள். வழக்கமான வரவேற்புரை, சிறப்புரைகளுக்குப் பிறகு பரிசு அறிவிப்பதற்கான நேரம் வந்தது. அந்த ஒரு சில வினாடிகள் அரங்கம் முழுவதும் நிசப்தத்தில் மூழ்கியது. அந்த நிசப்தத்தைக் கலைக்கும் விதமாக ஒலிபெருக்கியில் ஒலித்தது அந்த அறிவிப்பு, "முதல் பரிசு பெறும் கண்டுபிடிப்பு "ஹீரோ". எட்டாம் வகுப்பு சி-பிரிவில் படிக்கும் மகிழனை பரிசு பெற மேடைக்கு அழைக்கிறோம்..". மகிழனின் அம்மா அறிவிப்பைக் கேட்டதும் ஏறக்குறைய எழுந்து குதித்தேவிட்டார்.  மகிழன் பரிசை வாங்கிக் கொள்ள மேடையை நோக்கி ஓடினான். தன் மகன் பரிசு வாங்குவதை மொபைல் காமெராவால் போட்டோ எடுத்துத் தள்ளினார் அம்மா.

நிகழ்ச்சி முடிந்து காரில் வீடு திரும்பும் போது அம்மா தங்களது கண்டுபிடிப்பைப் பற்றி பேசிக்கொண்டே வந்தார். மகிழனுக்கு ஏதும் பேசத் தோன்றவில்லை. வீடு வந்து சேர்ந்ததும் மகிழன் தான் வாங்கிய பரிசை அம்மாவிடம் கொடுத்து, "இந்தங்கம்மா நீங்க ஆசைப்பட்டதை நிறைவேத்திட்டீங்க", என்றான்.
"இதை, நீயே உன் ரூம் ஷெல்ப்பில வச்சுக்கோ", என்றார் அம்மா.
"இல்லம்மா, இது உங்களோடது.. என்னோடாதில்லை. நீங்க ஒரு வாரம் லீவு போட்டு இதுக்காக உழைச்சிருக்கீங்க"
"இதுல உனக்கு சந்தோசம் இல்லையா.. உன்னோட பங்கு இல்லேன்னு நினைக்கிறீயா?"
"அம்மா, தபால்காரர் நம்ம வீட்டுக்கு ஒரு தபால் கொண்டுவந்து கொடுக்குறாரு.. நாம கை தட்டுவோமா? பாராட்டுவோமா? பட்டுவாடா பண்றது அவர் வேலை..அதத்தான் நானும்  செஞ்சிருக்கேன். ஹீரோவை பள்ளிக்கூடத்துக்கு எடுத்துட்டுப் போனேன். அங்கே கொடுக்கப்பட்ட பரிசை உங்களிடம் கொடுக்கிறேன். மேடையில் கிடைச்ச பாராட்டும் எனக்கில்லை.. இந்த பரிசில் எனக்கு பங்கும் இல்லை."
வாடிய தன் மகனின் முகத்தை பார்த்து கலங்கிய அம்மா, "நீ இந்த போட்டியில ஜெயக்கனும்னு தானடா நான் ஹெல்ப் பண்ணேன்...", என்றார்.
"அதுதாம்மா தப்பு.. பரிசு வாங்கனும்ம்னு நினைச்சீங்களே தவிர என்னால செய்யமுடியுமான்னு யோசிச்சீங்களா? நான் போட்டில கலந்துக்காதப்ப கூட என் நண்பர்கள் மேடையேறி பரிசு வாங்கும் போது நான் கீழே உட்கார்ந்து கை தட்டும்போது இருந்த சந்தோசம் இப்போ நான் மேடையேறி இந்த பரிசை வாங்கும் போது  இல்லையேம்மா. நேர்மையா முயற்சி செஞ்ச இன்னொரு மாணவனின் கண்டுபிடிப்புக்கு கிடைச்சிருக்க வேண்டிய பரிசை நான் குறுக்கு வழில தட்டிப்பறிச்சிட்டேம்மா."
மகிழனின் வார்த்தையில் இருந்த உண்மை அம்மாவை திருப்பிப்போட்டது. வெற்றி மட்டுமே கருத்தாகக் கொண்டு கண்மூடித்தனமாக ஓடுவது வாழ்க்கையல்ல என்று தன் மகன் மூலமாக இன்று கற்றுக் கொண்டார். தன் மகனின் கரம் பற்றி மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மகிழனும் உயர்நிலைப் பள்ளி சென்ற பிறகு அம்மாவின் ஆசையை பூர்த்திசெய்யும் பொருட்டு சாதனைகள் பல செய்யப் போவதாகவும் அதற்காக இன்றிலிருந்தே தன்னை தயார்படுத்திக் கொள்ளப் போவதாகவும் உறுதிபூண்டான். 

Friday, December 15, 2017

"அது" ---- ஓர் ஆவிக்கதை...!


இரவு மணி 10. ஜெய்பால் பேய்நூறு கிராமத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அந்த சுடுகாடு இடைப்பட்டது. அந்த ஆள் அரவமில்லாத பகுதியை கடந்து செல்ல 20 நிமிடம் ஆகலாம். ஒரு நிமிடம் தயங்கிநின்றான், சுற்றும் முற்றும் பார்த்தான். பயத்தால் அல்ல. பேச்சுதுணைக்கு யாரேனும் கிடைத்தால் பயணம் சுலபமாகுமென்று தான். அவன் நினைத்தது போலவே..இல்லை இல்லை.. அதற்கும் மேல, மிக அழகான ஒரு பெண் தென்பட்டாள். பளீரென ஆடை, தெளிவான முகம், மெலிதான கொழுசு, பெரிய கண்கள், கரிய நீண்ட கூந்தல்  சகிதமாக குனிந்த தலை நிமிராமல் வந்து கொண்டிருந்தாள்.

அருகில் வந்ததும் அவளை நிறுத்தி, "மன்னிக்கணும், நீங்களும் பேய்நூறு தானே போறீங்க?" என்று கேட்டான்.

அவன் கண்களை ஊடுருவிப்பார்த்து "ஆமாம்", என்றாள் தயங்கியபடி மெல்லிய குரலில்.

"நீங்க தப்ப நினைக்கலேனா நாம ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேச்சு துணையா பேசிட்டே போகலாமே..", அவன்.

"நான் கூட இந்த இடத்தை தனியா எப்படி கடக்குறதுன்னு பயந்துகிட்டேதான் வந்தேன்..நல்ல வேலையா உங்கள பாத்தேன்..", அவள்.

பயந்துகிட்டேதான் வந்தேன் என்று அவள் சொன்னாலும் கூட, அவளைப்பார்த்தால் பயந்தவளாக தோன்றவில்லை. நடக்க ஆரம்பித்தார்கள்.

"எப்படி நீங்க இந்த நேரத்துல...? தனியா ?", அவன்.

சிறிது யோசித்து விட்டு அவள், "நான் வழக்கமா வர்ற பேருந்து..இடையில் பழுதானதால் ஒரு மணிநேரம் தாமதம்..அதான்", என்றாள்.

"ஓஹோ..", அவன்.

பேசிக்கொண்டே சென்றார்கள். ஜெய்பால் வெகு நாகரிகமாக நடந்து கொண்டான். கண்ணியமாக பேசினான். அவளுக்கும் அவனுக்கும் சற்று இடைவெளி விட்டே நடந்தான். இருபது நிமிடத்தில் "பேய்நூறு உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற பலகை தெரிந்தது.

இடம், வலமாக இரண்டு சாலைகள் தென்பட்டன..

"நீங்க எந்த பாதையில் போகணும்?", அவள்.

"நான் வலது பாதைங்க.. நீங்க?", அவன்.

"நான் இடது பாதை", அவள்.

விடை பெற்றுக்கொண்டு அவள் தன் பாதையில் செல்லளானாள்.

பத்து பதினைந்து அடி சென்ற ஜெய்பால் அவள் போன பாதையைத் திரும்பிப் பார்த்தான். அவள் கண்களிலிருந்து மறைந்திருந்தாள். அதற்குள் எப்படி அந்த சாலை திருப்பத்தை அடைந்திருக்க முடியும் என்று துணுக்குற்றான். ஆயினும் தன பாதையில் நடக்கலானான்.

"ச்சே.. நீங்க எந்த பாதையில போறீங்கன்னு நாம முதல்ல கேட்டுருந்தா அவள் சொல்றதையே நாமும் சொல்லியிருக்கலாம்.
கூட 10 நிமிடமாவது அவளோடு பேசிட்டிருந்திருக்கலாம்.  நமக்கென்ன வேலையா..வெட்டியா. நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டோமே.. உயிர் போய்ட்டா இப்படித்தான் புத்தி மந்தமாகிடும் போல.." என்று வருத்தப்பட்டுக்கொண்டது "அது" !

திரிஷா இல்லேனா நயன்தாரா...

 சுள்ளென்று வெயில் முகத்தை சுட, கா..வி..யா.. என்று மனதுக்குள் அவள் பெயர் ஓட, தொடர்ந்து அவள் முகம் அவன் மூளையில் மின்னி மறைய, ஒரு கண் திறந்து கடிகாரத்தைப் பார்த்தான், சுதர்சன், 23 வயது, கணிப்பொறி பொறியாளர்.
மணி 4:43 என்றது. அது தற்போதய நேரமல்ல, பேட்டரி தன் கடைசி மூச்சைவிட்ட நேரம் என்று புரிய அவனுக்கு சில நொடிகளே தேவைப்பட்டன. கூட கொஞ்ச நேரம் உயிர் வாழ்ந்து 7 மணிக்கு தன்னை எழுப்பிருக்கலாம் என்று கடிகாரத்தை நொந்துகொண்டே அவசரமாக எழுந்தான். அடுத்த 14 வது நிமிடத்தில் தன் பைக்கில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தான். இன்று டீம் மீட்டிங் 9 மணிக்கு. எப்படியும் நேரத்துக்கு போகப்போவதில்லை. ஏற்கனவே மேனேஜரிடம் சுமூகமான உறவில்லை, எப்படியெல்லாம் தனெக்கென்று நிகழ்கிறது என்று தன்னைத்தானே கொண்டான். குறுஞ்சாலை கடந்து அண்ணா சாலையைத் தொட்ட சில நொடிகளில் பசும்பொன் தேவர் சாலையில் உள்ள சந்திப்பில் சிவப்பு சமிக்ஞை அவனை வரவேற்றது. பச்சை சமிக்ஞை கிடைக்க குறைந்தது 8-12 நிமிடம் தவம் கிடக்க வேண்டும். ஊருக்கு தொலைபேசி 10 நாட்கள் ஆகிவிட்ட நினைப்பு, அலுவலகம் பற்றிய சிந்தனை, என்றைக்காவது இந்த இடத்தை நிற்காமல் கடந்ததுண்டா என்ற எரிச்சல் என பல விஷயங்கள் மனதில் ஒரு ஓட்டம் ஓடி மறுபடியும் காவியா-விடம் வந்து நிலைத்தது. காவியா அதே தொழில் நுட்ப பூங்காவில் மற்றொரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவள், நல்ல சிநேகிதி. ஒன்னரை வருடம் பழகிய பிறகு 2 நாட்களுக்கு முன்பு தான் தன் காதலை வெளிப்படுத்தியிருந்தான். காவியாவுக்கு பெரிதாக அதிர்ச்சியில்லை; அவளும் எதிர்பார்த்திருக்ககூடும். இரண்டு நாள் அவகாசம் கேட்டுக்கொண்டாள். அலுவலகத்தில் இருந்து விடுப்பும் எடுத்துக்கொண்டாள். அவளுக்கு இவனைப்போலவே சுந்தர் என்று இன்னொரு நண்பன் உண்டு. அவனைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறாள். அவள் கேட்டுக்கொண்ட 2 நாள் அவகாசம் இந்த இருவரில் ஒருவனை தேர்வு செய்யவே என்பதை சுதர்சன் ஒருவாறாக யூகித்துக்கொண்டான். பச்சை சமிக்ஞை விழ, தன் பைக்கை விரட்டினான். ஓரிரு நிமிடம் தான் போயிருப்பான், போக்குவரத்துக் காவலர் ஒருவர் நிறுத்தி ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்களை சோதனையிட ஆரம்பித்தார். என்ன சோதனை இன்று.. காலை முதலே எதுவுமே சரியில்லையே என்று தன்னையே நொந்துகொண்டான். காவலரிடம் கையிலிருந்த ரூ.200யும் அழுதுவிட்டு அலுவலகம் அடைந்தான். மணி 9.45. மேனஜேரிடம் திட்டு, கையில் ஒரு பைசா இல்லாமல் மதிய சாப்பாட்டிற்கு நண்பனிடம் கடன், நினைத்த வேலையே முடிக்க முடியாமல் மாலை வரை போராடி தலை வலி, மாலை 7 மணிக்கு இன்னொரு மீட்டிங், கஸ்டமரிடம் இருந்து வந்த போன், காவியாவிடமிருந்து வராத போன் என்று அந்த நெடிய கொடிய நாள் முடியாமல் இவனைப்படுத்தியது. ஒரு வழியாக 9 மணிக்கு வீட்டிற்கு வந்து சாப்பிடாமலே படுக்கையில் சரிந்தான். அடிக்கடி கைபேசியை எடுத்துப்பார்த்துக்கொண்டான். இந்த மாதிரி ஒரு துரதிஷ்டமான நாளை தான் கண்டதுண்டா என்று யோசித்துப்பார்த்தான். துவண்டு போயிருந்தான். ஒரு வேளை காவியா தன்னை "நோ" சொல்லிவிடுவாளோ என்ற சிந்தனை அவனை வாட்டியது. ஒரு நொடி அவளை தொலைபேசியில் கூப்பிடலாமா என்று கூட நினைத்தான். பிறகு கண்களை மூடி சில நிமிடம் சும்மா இருந்தான். கைபேசியில் குறுஞ்செய்தி சிணுங்கியது. ஆர்வமாக எடுத்தான். "i love you" என்று வந்திருந்தது. காற்றில் குதித்தான். ஆழமான மூச்சு ஒன்று சுதந்திரமாக வெளியேறியது. உடனடியாக அவள் எண்ணை அழைத்தான்.மறு முனையில் பெண் குரல், "உங்கள் கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் ....". வந்த கோபத்தில் கைபேசியை தூரவிட்டெறிந்தான். இரண்டு அல்லது மூன்று பாகங்களாக சிதறியது. காவியாவின் குறுஞ்செய்திக்குப்பிறகும் துரதிஷ்டம் இன்று இன்னும் தொடர்கிறது என்பதை இவனால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. தரைவழி  தொலைபேசியை அணுகினான்.
மின்னல் வேகத்தில் காவியாவின் எண்ணை அழுத்தி ஹலோ சொல்ல, எதிர்முனையில் உற்சாகமான குரலில் அவள், "சுந்தர் !!??" என்று சொல்ல. "Sorry, wrong number " என்று சொல்லிவிட்டு தொலைபேசியை கீழே வைத்தான். சுந்தர்க்கு அனுப்ப வேண்டிய "i love you"வை தவறுதலாக பெயரொற்றுமையால் தனக்கு அனுப்பிவிட்டாள் என்று புரிந்துகொண்டான். செய்வதறியாது சில நிமிடம் நின்று கொண்டிருந்தான். இலக்கில்லாமல் சுவரை வெறித்துப்பார்த்தான். இதற்கு மேல் இன்று வேறு ஏதும் நடக்ககூடதென்றால் தூங்குவது ஒன்றே ஒரே வழி என்று விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் சரிந்தான். அடுத்த சில நிமிடங்களில் மின் வெட்டு ஏற்பட்டு விசிறி ஓடுவதை நிறுத்த, சென்னையின் தகிக்கும் வெப்பம் அக்கினி நாக்கை நீட்டியது. வெப்பத்தை இவன் உணராத போதும், உடம்பிலிருந்து வியர்வை வெளியேறவே செய்தது.  வியர்வையும், கண்ணீரும் தலையணை நினைத்தன. இவ்வளவையும் தாண்டி அசதியால் அடுத்த 40-50 நிமிடங்களில் தூங்கிப்போனான். அன்றைய மோசமான நாளும் அவனிடமிருந்து வெற்றிகரமாக விடைபெற்றுக்கொண்டது.

பின் இணைப்பு: (கதையை எதிர்மறையாய் முடிக்க விருப்பமில்லாததால், இந்த பின் இணைப்பு...)

காலை மங்கலான வெளிச்சத்தில் சுவர்கடிகாரத்தில் மணி பார்த்தான். ஆறு காட்டியது. பாண்ட்-ஷர்ட் சகிதமாக தூங்கியிருந்தான். நேற்றைய நினைவுகளை அசை போடாமல், அலுவலகம் புறப்படலானான். பளிச்சென்று உடை அணிந்தான். சிதறியடித்த கைபேசியை தேடினான். தேடும் போதே இந்த மாதம் புது கைபேசிக்கு ரூ.10,000 செலவு பண்ண வேண்டியிருக்குமோ என்ற எண்ணம் பயமுறுத்தியது. 3 பாகங்களை இணைத்து உயிர்ப்பிக்க ஆச்சர்யமாக வேலை செய்தது கைபேசி. சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ரீச்சார்ஜ் செய்து கொண்டான். பைக்கை உதைத்து அதன் தூக்கம் கலைத்தான். அலுவலகம் பயணித்தான். 2 நிமிடம் சென்றிருப்பான், ஒரு குறுஞ்செய்தி சிணுங்கியது. வண்டியை ஓட்டிக்கொண்டே கைபேசியை எடுத்துப்பார்த்தான். "hi..have a great day" என்றும், அனுப்பியது ரேகா என்றும் தெரிந்தது. ரேகா, காவியாவைப் போல் இன்னொரு சிநேகிதி. 3 மாதங்களுக்கு முன் ஒரு சின்ன வாக்குவாதத்தில் பேசுவதை நிறுத்திக்கொண்டவள்.. பல குறுஞ்செய்தி அனுப்பியும் மௌனத்தையே பதிலாகத் தந்தவள். இன்று திடீரென்று "hi..have a great day". பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதா வேண்டாமா..? அனுப்புவதென்றால் எப்போது அனுப்புவது..? ஒரு வேளை இவளும் வேறு யாருக்கோ அனுப்பவேண்டியத்தை தனக்கு அனுப்பிவிட்டாளோ? என பல கேள்விகள் முளைத்தன. அவர்கள் நட்பு, அதை தொடர்ந்து வந்த வாக்குவாதம் போன்ற எண்ணங்களும் மனத்திரையில் வேகமாக ஓடி மறைந்தன.. குறுஞ்சாலை கடந்து அண்ணா சாலையைத் தொட்டான். சில நொடிகளில் பசும்பொன் தேவர் சாலையில் உள்ள சந்திப்பை நெருங்கும் போது வலது கால் அனிச்சையாக பிரேக்கை அழுத்தச்சென்றது. அப்போது தான் கவனித்தான் பச்சை சமிக்ஞை அவனை வரவேற்பதை. இவன் கண்களை இவனால் நம்ப முடியவில்லை. இந்த வழியில் தான் இரண்டு வருடங்களாக போகிறான். நினைவில் உள்ளவரை இந்த இடத்தில் பச்சை கிடைத்ததில்லை. இன்று ஒரு அதிசய நாள் தான்... "Yes, this must be a great day", என்று எண்ணிக்கொண்டான். அலுவலகம் சென்றதும் ரேகாவுக்கு பதில் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் என்று நினைத்துக்கொண்டு பைக்கை இன்னும் வேகமாக விரட்டினான்.

புதிரான அழைப்பு

வெளியே கிளம்ப பைக் சாவியைத் தேடிக்கொண்டிருந்த கிரிஷாந்தை அவன் மொபைல் போன் கூப்பிட்டது. எடுத்துப்பார்த்தான். "அப்பா காலிங்..", என்று மொபைல் போன் திரை மிரட்டியது. சில வினாடிகள் திகைத்து செய்வதறியாது நின்றவனை கிச்செனிலிருந்து அம்மாவின் குரல் கலைத்தது. "அங்க என்னடா மொபைலை நோண்டிட்டு இருக்க.. உங்க அப்பாவுக்கு நாளைமறுநாள் ரெண்டாவது வருஷ திதி. ஹோட்டல்ல சாப்பாட்டுக்குச் சொல்லுன்னு நாலு நாளா கத்திட்டு இருக்கேன்.. கொஞ்சமாவது காதுல வாங்குறியா நீ ?"

அதற்குள் போனும் சத்தத்தை தானாகவே நிறுத்தியிருந்தது.  அம்மாவின் குரல் கேட்டோ என்னவோ ?!

குரலில் இலேசான நடுக்கத்துடன், "அ..அ..அங்கதாம்மா கிளம்பிட்டு இருக்கேன்..", என்று ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த பொய்யை பதிலாக கொடுத்தான். அம்மாவிடம் போன் விஷயத்தைப்பற்றி உடனே பேச வேண்டாம் என நினைத்துக்கொண்டான். இன்னமும் அவன் முகம் வெளிறியே இருந்தது. பிரிஜ்ஜை திறந்து சிறிது குளிர்ந்த தண்ணீர் குடித்தான். இவ்வளவு தேடியும் பைக் சாவி இன்று ஏனோ கிடைக்கவில்லை. கிரிக்கெட் பேட் இருந்த உரையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு பைக்கை அடைந்தான். பைக்கின் தலைப்பகுதியில் உள்ள சில வயர்களை இணைத்துப் பிறகு கை கட்டைவிரலால் இரண்டு மூன்று தடவை பைக் ஹாண்டில் பாரில் இருந்த "ஆட்டோ ஸ்டார்ட்" பட்டனை அழுத்தியும் பைக் தேமே என்று இருந்தது. எரிச்சலோடு ஸ்டார்ட்டரை மிதித்தான். நான்கைந்து மிதிகளுக்குப்பிறகு உயிர் மேல் இருந்த ஆசையால் பைக் விழித்துக்கொண்டது. பைக்கில் போகும்போது, "அப்பா காலிங்.." என்று மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தது.

அவனுக்குத்தெரியாது பைக்கில் பிரேக் வயர் அறுந்து போயிருந்தது.

குறிப்பு:
பைக் சாவி கிடைக்காதது, பைக் ஸ்டார்ட் ஆகாதது மற்றும் அவனுக்கு வந்த புதிரான போன் கால் என அத்தனை அமானுஷ்ய சமிக்ஞைகளையும் கிரிஷாந்த் கவனிக்கத்தவறிவிட்டான். கவனித்திருந்தால் அவனும் இன்று நம்மோடு சேர்ந்து இந்த கதையைப் படித்துக்கொண்டிருப்பான். 

திங்கட்கிழமை

நெரிசலான நூறடி சாலையில் கட்டப்பட்டிருந்த அந்த இருபது மாடி அடுக்கு மாடிக்குடியிருப்பில் தோராயமாக நடுப்பகுதியில் லேசாக தீப்பற்றி மெதுவாகப் பரவிக்கொண்டிருந்தது. கட்டிடத்தை சுற்றி ஒரு பரபரப்பு தொற்றியிருந்தது.

எட்டாவது மாடியில் மோகன் தனது அபார்ட்மெண்டிலிருந்து வெளியே வர எத்தனித்துக்கொண்டிருந்தான். தீயணைப்பு வண்டியின் மணியோசை கேட்டுக்கொண்டே இருந்தது. தூங்கிக்கொண்டிருந்த  எட்டு மாத இளையமகனை கையில் ஏந்தியபடி ஹாலை அடைந்தவன் வீட்டுக்குள்ளே இருந்த தன்  மனைவியிடம், "ஷைலு அப்பவே எந்திருச்சுட்டாளே.. இன்னும் என்ன பண்ணிட்டிருக்கீங்க.. வாசல் கதவுல தீ பரவ ஆரம்பிருச்சுருச்சு" என்று கத்தினான்.
மனைவி, "பாத்ரூம்  லாக்கை இவளுக்கு திறக்க தெரியலங்க .. வெளில இருந்து என்னாலயும் திறக்க முடியல..எனக்கு பயமாயிருக்கு ", என்று பதறினாள்.
மோகன், "ஓஹ் மை காட்....", என்று அலறியபடி பாத்ரூம் நோக்கி ஓடினான்.
ஷைலு, "அப்பா...அப்பா...", என்று தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். நூறு முறை திறந்து பழகிய லாக்கை இன்று பயத்தில் அவளுக்குத்  திறக்கத் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட இளையமகன் என்ன நடக்கிறதென்று புரியாமல் இப்போது அழத்தொடங்களினான்.  "இதோ அப்பா வந்துட்டேன்டா...", என்று சொல்லிக்கொண்டே கைக்குழந்தையை மனைவி கையில் கொடுத்துவிட்டு பாத்ரூம் கதவை காலால் பலம்கொண்டமட்டும் உதைத்தான்.  அது திறப்பதாய் இல்லை. ஒரு வினாடி, "பில்டர்ஸ் நல்லாத்தான் கட்டிக்கொடுத்திருக்கான்", என்ற எண்ணக்கீற்று தோன்றி மறைந்தது. திடீரென தீயணைப்பு வண்டி சத்தம் நின்றிருந்தது.  தீயணைப்பு வண்டி அவனுடைய கடைசி நம்பிக்கை. சத்தம் நின்றது அவனுக்கு உச்சபட்ச அதிர்ச்சியைக் கொடுத்தது. அதிர்ச்சியில் அனிச்சையாக, "வண்டி எங்க போச்சு?", என்று கத்தினான். தன்னை மீறி வார்த்தை வெளிவந்தது அப்போது தான் புரிந்தது.
திரும்பிப்பார்த்தான் பக்கத்தில் மனைவி தூங்கிக்கொண்டிருந்தாள், "சே.. கனவா.. நல்லவேளை", என மெலிதாக உச்சரித்ததான்.
அருகில் இருந்த அலாரம் கிளாக்கைப்பார்த்தான். 5:40, திங்கட்கிழமை என்று தன் அசிங்கமான முகத்தை காட்டியது. கனவில் வந்த தீயணைப்பு வண்டிக்கு பத்து நிமிடம் மணி அடித்தது இந்த அலாரம் கிளாக் தான் என்று புரிந்தது ! ஆபீஸ் மீட்டிங், ப்ராஜெக்ட் டெட் லைன், கஸ்டமர் போன் கால் என வரிசையாக எண்ண அலைகள் ஒன்றன் மேல் ஒன்றாய் மேலெழுந்து அவனுக்கு சோர்வை உண்டாக்கின. திங்கட்கிழமை மிரட்டியது. கண்களை மெதுவாக மூடினான், "அந்த கனவே உண்மையாயிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்", என்று யோசித்தபடி.

Friday, April 29, 2016

ஞானப்பழம் - A Tamil Skit for School Kids !

******** காட்சி 1: அப்பா தன் இரு மகள்களுடன் அவர் வீட்டில்... ********

அப்பா: என்னம்மா சம்மர் லீவு விட்டாச்சு .. உங்கம்மா உங்கள எத்தனை class-ல சேத்துவிட்டுருக்கா.?

அக்கா : அத ஏம்ப்பா கேக்குறீங்க ! math, பாட்டு, டான்ஸ் and கராத்தே !! கீபோர்டுக்கு ஒருத்தர்கிட்ட விசாரிச்சுட்டு இருக்காங்க

அப்பா: என்னம்மா சின்னவளே .. நீ ஒன்னும் பேசாம இருக்க

தங்கை : ஒன்னும் சொல்றதுக்கில்லப்பா. நான் பயங்கர சோகத்துல இருக்கேன். விட்டா தாடியே வளர்ந்துடும்

அப்பா: ஹா..ஹா.. என் மனைவி சூப்பரோ சூப்பர். எப்படி உங்க ரெண்டு பேருக்கும் செக் வச்சா பாத்தீங்களா ?

தங்கை : ரொம்ப சந்தோசப்படாதீங்கப்பா .. ஒவ்வொரு class க்கும் pickup-drop நீங்க தான். அம்மாவை ஆபீஸ்ல ஏதோ புது ப்ராஜெக்ட்ல போட்டாங்களாம் ..so ..அம்மா escape !

அப்பா: என்ன..!? என்ன !!?  இதெல்லாம் சரியில்ல சின்ன பிள்ளைங்க எப்படி இத்தனை class ஐ சமாளிப்பாங்க .. ஒரு break  வேண்டாம் பிள்ளைங்களுக்கு. முதல்ல அம்மாட்ட பேசுறேன்




****** காட்சி 2:  அப்பா வீட்டில் இருக்கையில் அவரது அக்கா வருகிறார் ... *********

Things needed: Pen Drive, Tablet

அப்பா : வா அக்கா..

அத்தை : வந்துட்டேன்.. எப்படிடா இருக்க.. ?

அப்பா : நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க.. <அக்கா பெயர் >, உள்ள போய் காபி கொண்டுவாம்மா

அக்கா :  kitchenல இருந்துதான்ப்பா வர்றேன். இன்னமும் காபி ரெடியாகிட்டு தான் இருக்கு..

தங்கை: அக்கா, மறுபடியும் போய் பாருக்கா .. அத்தை வந்துட்டா  காபி ரெடின்னு அர்த்தம். காபி ரெடியான்னா அத்தை வந்துருவாங்கன்னு அர்த்தம் .. இல்ல அப்பா? ;)

அத்தை : அவ்வளவு   கிண்டலா  ?? ஹ்ம்ம்..ஒரு புது tablet கிடைச்சது .. உங்களுக்கு present பன்னலாம்னு எடுத்துட்டு வந்தேன் .. இப்படியெல்லாம் பேசினீனா காப்பிய மட்டும் குடிச்சுட்டு போயிட்டே இருப்பேன்..ஆமா.

அக்கா,தங்கை: ஓகே..ஓகே.. நாங்க கப்சிப். tablet ஐ காட்டுங்க.
(அத்தை showing the tablet )

அத்தை: நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதுல win பண்றவங்களுக்கு tablet ..ok வா?

அப்பா : ஓ .. நாரதர் ஞானப்பழத்துக்கு போட்டி வச்சாரே அந்த மாதிரியா ?

அத்தை: exactly .. இந்த ரெண்டு pen drive லயும்  ஐம்பெருங்காப்பியங்கள copy பண்ணி வச்சுருக்கேன். ..அது சரி....,  ஐம்பெருங்காப்பியங்கள் என்னென்ன ?

அக்கா, தங்கை: சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவக சிந்தாமணி, குண்டலகேசி

அத்தை: சரியாய் சொன்னீங்க.. இப்ப ஆளுக்கு ஒரு pendrive ஐ கொடுக்குறேன் ..உங்கள்ள யாரு முதல்ல இதை தமிழ்த்தாயை போற்றி, தமிழ் வளர்க்குற இடமா பாத்து கொடுத்துட்டு வர்ரீங்களோ அவங்களுக்கு தான் இந்த tablet

தங்கை: அக்கா, நீயே அந்த tablet ஐ வாங்கிக்கோ.. என்ன ஆளா விடுங்க.. எனக்கில்லை..எனக்கில்லை வேற யாருக்கோ..கிடைக்கப்போது..(leaving out the hall, speaking this dialog)

************** காட்சி 3:  **************

Things needed: Pen Drive, Smart Phone

அக்கா : ஹாய் guys இந்த pen drive ஐ ஒரு நல்ல தமிழ் establishment ல ஒப்படைக்கணும் .. ரொம்ப அவசரம்.

அக்காவின் ஃபிரண்ட் 1: ஏதோ james bond range க்கு பேசுற

அக்கா : விவரமா அப்பறம் சொல்றேன். ஏற்கனவே ஒரு நாள் முழுக்க இத பத்தி யோசுச்சுட்டேன்  .. ஒன்னும் தோனல..உங்கள்ள யாருக்காவது அந்த மாதிரி இடம் தெரியுமா...?

அக்காவின் ஃபிரண்ட் 1: ஓ தெரியுமே ..google க்கு தெரிஞ்சா  நமக்கு தெரிஞ்ச மாதிரிதான் .. இப்ப தேடிடலாம் ..

அக்காவின் ஃபிரண்ட் 2: இது ஒரு பெரிய விஷயமா..எங்கிட்ட கேட்டா  சொல்லப்போறேன். University of Chicago , univ of Texas இங்கெல்லாம் தனியா தமிழ் வகுப்புகள் நடத்துறாங்க..அது போக தமிழ் மொழி சம்பந்தமா ஆராய்சிகளும் பண்றாங்க

(தங்கையின்  ஃபிரண்ட் 1 and தங்கையின்  ஃபிரண்ட் 2 are  entering  the  scene ...but no dialogues for them in this scene )

அக்கா : wow  great .. அப்ப நான் univ  of Texas க்கே அனுப்பிடறேன். Georgia க்கும் பக்கம் . package-ம்  சீக்கிரம் போய்டும்

அக்காவின் ஃபிரண்ட் 2: எனக்கு தெரிஞ்ச தகவல சொல்லிட்டேன்.. எதுக்கும் google ல check  பண்ணிக்கோங்க

அக்காவின் ஃபிரண்ட் 1: ok <அக்காவின் ஃபிரண்ட் 2>, நீ google-அ விட better தான் .. ஒத்துக்குறோம்

அக்கா : நீங்க ரெண்டுபேரும் google better ஆ அல்லது <அக்காவின் ஃபிரண்ட் 2> better ஆ ன்னு பட்டிமன்றம் நடத்திட்டு இருங்க .. நான் Post Office க்கு கிளம்பறேன்

அக்காவின் ஃபிரண்ட் 1, அக்காவின் ஃபிரண்ட் 2: ஏய்..ஏய்.. கூப்பிட்டளேன்னு இவள நம்பி வீட்டுக்கு வந்தா தனியா விட்டுட்டு போயிட்டே இருக்கா !!!

************** காட்சி 4:  **************

Things needed: Pen Drive

தங்கையின் ஃபிரண்ட் 1, தங்கையின் ஃபிரண்ட் 2: <தங்கை><தங்கை>,

தங்கை : ஹாய் friends .. எப்ப வந்தீங்க

தங்கையின் ஃபிரண்ட் 1: என்ன உங்க அக்கா friends  இப்பவே காலேஜ்ல சேரப் போறாங்களா ? UnivOfTexas UnivOfChicago ன்னுலாம் பேசிட்டு இருக்காங்க..

தங்கை: அவங்க எதோ பண்ணட்டும் நாம விளையாடலாம்..

தங்கையின் ஃபிரண்ட் 1: ஏய்..நேத்து என் friend ஒரு சூப்பரான app ஒன்னு காமிச்சாள் .. tablet  இருக்கா உன்கிட்ட ? நான் அத காட்டுறேன்

தங்கை : tablet ..tablet ... நம்ம விடாது போல இருக்கே.. இப்ப என்கிட்டே tablet  இல்லை..ஆனா நமக்குன்னு ஒரு tablet கிடைக்க ஒரு வழி இருக்கு

தங்கையின் ஃபிரண்ட் 2: அது எப்படி?

தங்கை: அது ஒரு பெரிய flashback ... (spiralling on friends face ).. புரிஞ்சதா ?

தங்கையின் ஃபிரண்ட் 2: புரிஞ்சது புரிஞ்சது.. இப்போ எப்படியாவது அந்த pendriveஅ  யார்ட்டயாவது தள்ளிவிடனும்.. அவ்வளவு தானே ?? :)

தங்கை :  சுத்தம் !

தங்கையின் ஃபிரண்ட் 1: என்கிட்டே நிறைய  kids  movie இருக்கு .. இதுல copy பண்ணிக்கலாம் ..so  எப்ப வேணாலும் பாக்கலாம் :)

தங்கையின் ஃபிரண்ட் 2: Or we can sell it on eBay .. that way we can make some quick bucks.. :) How many GBs  it can hold ?

தங்கை: ஏதாவது உருப்படியான idea  தருவீங்கன்னு உங்ககிட்ட கேட்டேன் பாருங்க என்னை சொல்லணும்

தங்கையின் ஃபிரண்ட் 2: ஐடியா  ! ஐடியா !!

தங்கை: என்ன ? என்ன ??

தங்கையின் ஃபிரண்ட் 2: இப்ப ஏதும் இல்ல...வந்தா சொல்றேன் :)

தங்கை: உன்ன.. என்ன பண்றேன் பார். (acting as if going to hit him)
          சரி உங்களை நம்பி பிரயோஜனம் இல்ல.. எனக்கு தெரிஞ்ச ஒரே தமிழ் பேசுற இடம் நம்ம தமிழ் பள்ளி தான் .. எனக்கு நெறைய தமிழ் பேசுற friendsம் அங்க தான் இருக்காங்க .. இத பேசாம அங்கேயே கொண்டு போய் கொடுத்துடலாம்னு நினைக்குறேன் .. வேற ஏதும் எனக்கு தோனல ..

தங்கையின் ஃபிரண்ட் 1: செம idea <தங்கை>

தங்கையின் ஃபிரண்ட் 2: pendrive  போச்சே !!



************** காட்சி 5:  **************

Things needed: 2 Tablets
அத்தை : பசங்களா ரெண்டு பேரும் pendrive-அ  என்ன பண்ணீங்க

அக்கா : நான் UnivOfTexas ல உள்ள தமிழ் department க்கு போஸ்ட் பண்ணிட்டேன் ..இந்நேரம் அவங்களுக்கு கிடைச்சிருக்கும்

அத்தை: welldone <அக்கா>.. பின்னிட்ட .. <தங்கை >நீ என்ன பண்ணிருக்கீங்க ?

தங்கை: நான் ... வந்து... நான்...

அத்தை: சொல்லும்மா

தங்கை: நான் ... லில்பர்ன் தமிழ் பள்ளிக்கு கொடுத்துட்டேன் அத்தை

அத்தை: LTS லயா ??

all  friends (chorusing ) : என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா  !

அத்தை: அட கிண்டல் பண்ணாதீங்க பிள்ளைகளா ... நான் tablet ஐ <தங்கை>க்கு தான் கொடுக்கபோறேன் .. அவ தான் winner

தங்கை: ஐ ... நிஜமாவா ??

அக்கா: அப்ப எனக்கு tablet  கிடையாதா.. நான் தோத்துட்டேனா?

அப்பா: அப்படியில்லம்மா... LTSல  பல வருஷங்களா எவ்வளவோ குழந்தைகளுக்கு தமிழ் கத்துக்கொடுத்துட்டு   இருக்காங்க . பேச , எழுத கத்துக் கொடுக்குறது போக பல கலை நிகழ்ச்சிகள் மூலமா நம்ம ஊர் கலாச்சாரத்தையும்  கத்துக்கொடுக்காங்க . பல பெற்றோரும் தன்னார்வத்தில முடிஞ்ச அளவுக்கு LTS மூலமா தங்கள் குழந்தைகளுக்கு தமிழை எடுத்துட்டு போறாங்க. அடுத்த தலைமுறைக்கு நம்ம மொழியை கத்துக்கொடுப்பதன் மூலமா இவங்கதான் உண்மையாவே தமிழை வளர்க்குறாங்க

தங்கை: அப்பா, நீங்க சொன்னப்பிறகு தான் LTS ல இவ்வளவு விஷயம் நடக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். இது எதுவுமே தெரியாமத்தான் நான் pendrive ஐ LTS க்கு அனுப்பினேன் ..ஆனா  அக்கா இந்த போட்டிக்காக friends கிட்ட discuss பண்ணா , இன்டர்நெட்ல research பண்ணா..post office க்கு லாம் போயி universityகு parcel  அனுப்பினாள்  .. அதனால நீங்க இத அக்காவுக்கே கொடுத்துடுங்க..

அத்தை: சரி.. சரி.. நான் ஒருத்தி பெரிய மனுஷி இருக்கேன்.. தீர்ப்பை நான் தான் சொல்வேன். தீர்ப்பு என்னன்னா "இந்த tablet உங்க ரெண்டு பேருக்கும் common .. share பண்ணி use பண்ணிக்கோங்க ".. இல்ல.. இது சரி வராதுன்னு நினைச்சீங்கன்னா, என்கிட்டே இருக்கவே இருக்கு இன்னொரு smart phone .. வேற போட்டி வச்சுடலாம்

குழந்தைகள்:  மறுபடியும் மொதல்ல இருந்தா...???!!!! ( tablet ஐ அத்தை கையில் இருந்து பறித்து விட்டு....நாலா புறமும் தெறித்து ஓடுகிறார்கள்  )

அத்தை: அட இங்க இருந்த குழந்தைகளை யாரவது பாத்தீங்களா??? (asking the audience ).. தப்பிச்சுட்டாங்க போல.. இப்போ போறேன்.. மறுபடியும்.... வருவேன் !

******** சுபம்   ********

Tuesday, November 3, 2015

my kid's favorite dress..1

Short story: (based on a true incident, but built with little imagination...)அவளுக்கு வயது மூன்று. அந்த வயதிற்கே ஆன குறும்புகளுடன் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. தனக்கென்று பிடித்த நிறம், பிடித்த ஆடை, பிடித்த உணவு என்று தனக்கென்று ஒரு இரசனை, தான் ஒரு தனி உயிர் என்று உணர்ந்து வளர்கின்ற வயது.எப்போதென்று தெரியவில்லை ஆனால் நீல நிறம் உள்ள இரண்டு ஆடைகளுக்கு அடிமையாகிவிட்டாள். ஒவ்வொரு நாளும் குளித்து முடித்தவுடன் ஆடைக்காக ஒரு பெரிய சண்டை. முடிவில் ஜெயிப்பதேன்னவோ குழந்தை தான். அவளுக்கு பிடித்த ஆடை கிடைக்கும் வரை விட மாட்டாள்.இப்படி தான் ஒரு காலை,குழந்தை, மகிழ்ச்சியாக, "இன்னைக்கு நீல நிற ஆடை தானே?"நான், "அது இன்னும் துவைக்கவில்லையே.. இன்னைக்கு வேற ஆடை போட்டுக்கோ""எனக்கு அது தான் வேணும்"வாக்குவாதம் முற்றுகிறது.. குழந்தை வேறு ஆடைக்குள் திணிக்கப்படுகிறாள்.அடுத்த பிரச்சினை ஆரம்பிக்கிறது.."அப்பா, இன்னைக்கு பள்ளிக்கூடம் போக வேண்டாம்""சரி போக வேண்டாம்"சில நிமிடங்களுக்கு பிறகு.."அப்பா, நாளைக்கு நீல ஆடை போட்டுட்டு பள்ளிக்கூடம் போறேன்"ஆடை தான் பிரச்சினை என்று புரிந்தது. எதற்கு ஒரு நாள் விடுப்பு எடுப்பானேன் என்று, தலையணைக்கு உறை போடுவது போல நீல நிற ஆடைக்கு மாற்றப்படுகிறாள் குழந்தை. குழந்தையில் முகத்தில் மலர்கிறது அப்படி ஒரு மகிழ்ச்சி.அப்போது தான் அறிவிப்பூர்வமாக யோசித்து ஒரு முடிவெடுத்தேன் இனி அவள் விருப்ப ஆடையை அணிவிப்பதென்று. ஓரிரு வாரம் நன்றாகத்தான் போனது. சிரமம் என்னவென்றால் ஒன்று மாற்றி ஒன்று சரியாக துவைக்க வேண்டும். நம் சௌரியத்திற்க்காக வாரம் ஒரு நாள் துவைப்பது சரிவராது.
வார இறுதி. மறுபடியும் சிந்தித்து தான் அந்த விபரீத முடிவை துணிந்து எடுத்தேன். குழந்தையை கூட்டிக்கொண்டு ஆடை வாங்க கடைக்குள் நுழைந்தோம்.. (ஐயோ, என்ன காரியம் செய்யரீங்க-ன்னு நீங்க பதறுவது எனக்கு புரிகிறது.. அப்போது புரியவில்லை எனக்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு ஆடை இருந்தால் மாற்றி மாற்றி துவைத்து போட வசதியாக இருக்கும். இரண்டு ஆடைகளை விட மூன்று ஆடை நமக்கு வசதி தானே. இது சரியாக போனால் அடுத்து நான்கு ஆடைகளாக்கும் இரகசியத்திட்டமும் என்னிடம் இருந்தது.குழந்தையின் தேடல் ஆரம்பிக்கிறது.. அவர்களுடைய தேடலில் விலை பட்டையோ, அடுத்தவர்கள் இந்த நிறத்தை ஏற்றுக்கொள்வார்களா என்ற கவலையில்லை. அந்த பார்வை நமக்குப்புரியாது. அதற்க்கெல்லாம் ஒரு தெளிவு வேண்டும். 5-10 நிமிடங்களுக்குள் கையில் ஒரு ஆடையோடும், முகத்தில் வெற்றிச்சிரிப்போடும் வருகிறாள். ஒரு பிரச்சினையில் தீர்வை நோக்கி முதல் படியை வெற்றிகரமாக கடந்த மகிழ்ச்சி எனக்கு.திங்கட்கிழமை காலை, எதிபார்த்தது மாதிரியே புது ஆடைக்குள் குதித்தாள் குதூகலமாக! அன்றைய காலை நன்றாகப்போனது.அடுத்த நாள் நான் எதிர்பாராத ஒன்று நடந்தது. தெளிவாகச்சொன்னாள் புதிதாக எடுத்த ஆடை தான் இன்றும் வேண்டும் என்று. பரவாயில்லை, புது ஆடை மீதான ஈர்ப்பு என்று அனுமதித்தேன்.அன்று மட்டும் அல்ல அடுத்து வந்த நாட்களும் அதே பதில் தான். அப்போது தான் புரிந்தது.. இரண்டு மூன்றாகவில்லை.. இரண்டு ஒன்றாகிவிட்டதென்று. முன்னால் பிடித்திருந்த அந்த இரண்டும் பிடிக்காமல் போய், இந்த ஒன்று தான் தினமும் என்று மாறிவிட்டது கதை. நீ எதையும் போடுவதில்லை, எல்லா ஆடைகளையும் வேறு யாருக்காவது கொடுக்கப்போகிறேன் என்று சொன்னதைப்பற்றி அவள் அலட்டிக்கொள்ளவே இல்லை.அடுத்து என்ன செய்வதென்று யோசிப்பதா.. அல்லது யோசிக்காமல் அப்படியே விட்டுவிடுவதா தெரியவில்லை. நாம யோசிச்சாலும் நமக்கு வினையாக அல்லவா முடிகிறது...அவ்வ்வ்வ்