Tuesday, November 3, 2015

my kid's favorite dress..1

Short story: (based on a true incident, but built with little imagination...)அவளுக்கு வயது மூன்று. அந்த வயதிற்கே ஆன குறும்புகளுடன் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. தனக்கென்று பிடித்த நிறம், பிடித்த ஆடை, பிடித்த உணவு என்று தனக்கென்று ஒரு இரசனை, தான் ஒரு தனி உயிர் என்று உணர்ந்து வளர்கின்ற வயது.எப்போதென்று தெரியவில்லை ஆனால் நீல நிறம் உள்ள இரண்டு ஆடைகளுக்கு அடிமையாகிவிட்டாள். ஒவ்வொரு நாளும் குளித்து முடித்தவுடன் ஆடைக்காக ஒரு பெரிய சண்டை. முடிவில் ஜெயிப்பதேன்னவோ குழந்தை தான். அவளுக்கு பிடித்த ஆடை கிடைக்கும் வரை விட மாட்டாள்.இப்படி தான் ஒரு காலை,குழந்தை, மகிழ்ச்சியாக, "இன்னைக்கு நீல நிற ஆடை தானே?"நான், "அது இன்னும் துவைக்கவில்லையே.. இன்னைக்கு வேற ஆடை போட்டுக்கோ""எனக்கு அது தான் வேணும்"வாக்குவாதம் முற்றுகிறது.. குழந்தை வேறு ஆடைக்குள் திணிக்கப்படுகிறாள்.அடுத்த பிரச்சினை ஆரம்பிக்கிறது.."அப்பா, இன்னைக்கு பள்ளிக்கூடம் போக வேண்டாம்""சரி போக வேண்டாம்"சில நிமிடங்களுக்கு பிறகு.."அப்பா, நாளைக்கு நீல ஆடை போட்டுட்டு பள்ளிக்கூடம் போறேன்"ஆடை தான் பிரச்சினை என்று புரிந்தது. எதற்கு ஒரு நாள் விடுப்பு எடுப்பானேன் என்று, தலையணைக்கு உறை போடுவது போல நீல நிற ஆடைக்கு மாற்றப்படுகிறாள் குழந்தை. குழந்தையில் முகத்தில் மலர்கிறது அப்படி ஒரு மகிழ்ச்சி.அப்போது தான் அறிவிப்பூர்வமாக யோசித்து ஒரு முடிவெடுத்தேன் இனி அவள் விருப்ப ஆடையை அணிவிப்பதென்று. ஓரிரு வாரம் நன்றாகத்தான் போனது. சிரமம் என்னவென்றால் ஒன்று மாற்றி ஒன்று சரியாக துவைக்க வேண்டும். நம் சௌரியத்திற்க்காக வாரம் ஒரு நாள் துவைப்பது சரிவராது.
வார இறுதி. மறுபடியும் சிந்தித்து தான் அந்த விபரீத முடிவை துணிந்து எடுத்தேன். குழந்தையை கூட்டிக்கொண்டு ஆடை வாங்க கடைக்குள் நுழைந்தோம்.. (ஐயோ, என்ன காரியம் செய்யரீங்க-ன்னு நீங்க பதறுவது எனக்கு புரிகிறது.. அப்போது புரியவில்லை எனக்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு ஆடை இருந்தால் மாற்றி மாற்றி துவைத்து போட வசதியாக இருக்கும். இரண்டு ஆடைகளை விட மூன்று ஆடை நமக்கு வசதி தானே. இது சரியாக போனால் அடுத்து நான்கு ஆடைகளாக்கும் இரகசியத்திட்டமும் என்னிடம் இருந்தது.குழந்தையின் தேடல் ஆரம்பிக்கிறது.. அவர்களுடைய தேடலில் விலை பட்டையோ, அடுத்தவர்கள் இந்த நிறத்தை ஏற்றுக்கொள்வார்களா என்ற கவலையில்லை. அந்த பார்வை நமக்குப்புரியாது. அதற்க்கெல்லாம் ஒரு தெளிவு வேண்டும். 5-10 நிமிடங்களுக்குள் கையில் ஒரு ஆடையோடும், முகத்தில் வெற்றிச்சிரிப்போடும் வருகிறாள். ஒரு பிரச்சினையில் தீர்வை நோக்கி முதல் படியை வெற்றிகரமாக கடந்த மகிழ்ச்சி எனக்கு.திங்கட்கிழமை காலை, எதிபார்த்தது மாதிரியே புது ஆடைக்குள் குதித்தாள் குதூகலமாக! அன்றைய காலை நன்றாகப்போனது.அடுத்த நாள் நான் எதிர்பாராத ஒன்று நடந்தது. தெளிவாகச்சொன்னாள் புதிதாக எடுத்த ஆடை தான் இன்றும் வேண்டும் என்று. பரவாயில்லை, புது ஆடை மீதான ஈர்ப்பு என்று அனுமதித்தேன்.அன்று மட்டும் அல்ல அடுத்து வந்த நாட்களும் அதே பதில் தான். அப்போது தான் புரிந்தது.. இரண்டு மூன்றாகவில்லை.. இரண்டு ஒன்றாகிவிட்டதென்று. முன்னால் பிடித்திருந்த அந்த இரண்டும் பிடிக்காமல் போய், இந்த ஒன்று தான் தினமும் என்று மாறிவிட்டது கதை. நீ எதையும் போடுவதில்லை, எல்லா ஆடைகளையும் வேறு யாருக்காவது கொடுக்கப்போகிறேன் என்று சொன்னதைப்பற்றி அவள் அலட்டிக்கொள்ளவே இல்லை.அடுத்து என்ன செய்வதென்று யோசிப்பதா.. அல்லது யோசிக்காமல் அப்படியே விட்டுவிடுவதா தெரியவில்லை. நாம யோசிச்சாலும் நமக்கு வினையாக அல்லவா முடிகிறது...அவ்வ்வ்வ்