Friday, December 15, 2017

"அது" ---- ஓர் ஆவிக்கதை...!


இரவு மணி 10. ஜெய்பால் பேய்நூறு கிராமத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அந்த சுடுகாடு இடைப்பட்டது. அந்த ஆள் அரவமில்லாத பகுதியை கடந்து செல்ல 20 நிமிடம் ஆகலாம். ஒரு நிமிடம் தயங்கிநின்றான், சுற்றும் முற்றும் பார்த்தான். பயத்தால் அல்ல. பேச்சுதுணைக்கு யாரேனும் கிடைத்தால் பயணம் சுலபமாகுமென்று தான். அவன் நினைத்தது போலவே..இல்லை இல்லை.. அதற்கும் மேல, மிக அழகான ஒரு பெண் தென்பட்டாள். பளீரென ஆடை, தெளிவான முகம், மெலிதான கொழுசு, பெரிய கண்கள், கரிய நீண்ட கூந்தல்  சகிதமாக குனிந்த தலை நிமிராமல் வந்து கொண்டிருந்தாள்.

அருகில் வந்ததும் அவளை நிறுத்தி, "மன்னிக்கணும், நீங்களும் பேய்நூறு தானே போறீங்க?" என்று கேட்டான்.

அவன் கண்களை ஊடுருவிப்பார்த்து "ஆமாம்", என்றாள் தயங்கியபடி மெல்லிய குரலில்.

"நீங்க தப்ப நினைக்கலேனா நாம ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேச்சு துணையா பேசிட்டே போகலாமே..", அவன்.

"நான் கூட இந்த இடத்தை தனியா எப்படி கடக்குறதுன்னு பயந்துகிட்டேதான் வந்தேன்..நல்ல வேலையா உங்கள பாத்தேன்..", அவள்.

பயந்துகிட்டேதான் வந்தேன் என்று அவள் சொன்னாலும் கூட, அவளைப்பார்த்தால் பயந்தவளாக தோன்றவில்லை. நடக்க ஆரம்பித்தார்கள்.

"எப்படி நீங்க இந்த நேரத்துல...? தனியா ?", அவன்.

சிறிது யோசித்து விட்டு அவள், "நான் வழக்கமா வர்ற பேருந்து..இடையில் பழுதானதால் ஒரு மணிநேரம் தாமதம்..அதான்", என்றாள்.

"ஓஹோ..", அவன்.

பேசிக்கொண்டே சென்றார்கள். ஜெய்பால் வெகு நாகரிகமாக நடந்து கொண்டான். கண்ணியமாக பேசினான். அவளுக்கும் அவனுக்கும் சற்று இடைவெளி விட்டே நடந்தான். இருபது நிமிடத்தில் "பேய்நூறு உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற பலகை தெரிந்தது.

இடம், வலமாக இரண்டு சாலைகள் தென்பட்டன..

"நீங்க எந்த பாதையில் போகணும்?", அவள்.

"நான் வலது பாதைங்க.. நீங்க?", அவன்.

"நான் இடது பாதை", அவள்.

விடை பெற்றுக்கொண்டு அவள் தன் பாதையில் செல்லளானாள்.

பத்து பதினைந்து அடி சென்ற ஜெய்பால் அவள் போன பாதையைத் திரும்பிப் பார்த்தான். அவள் கண்களிலிருந்து மறைந்திருந்தாள். அதற்குள் எப்படி அந்த சாலை திருப்பத்தை அடைந்திருக்க முடியும் என்று துணுக்குற்றான். ஆயினும் தன பாதையில் நடக்கலானான்.

"ச்சே.. நீங்க எந்த பாதையில போறீங்கன்னு நாம முதல்ல கேட்டுருந்தா அவள் சொல்றதையே நாமும் சொல்லியிருக்கலாம்.
கூட 10 நிமிடமாவது அவளோடு பேசிட்டிருந்திருக்கலாம்.  நமக்கென்ன வேலையா..வெட்டியா. நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டோமே.. உயிர் போய்ட்டா இப்படித்தான் புத்தி மந்தமாகிடும் போல.." என்று வருத்தப்பட்டுக்கொண்டது "அது" !

திரிஷா இல்லேனா நயன்தாரா...

 சுள்ளென்று வெயில் முகத்தை சுட, கா..வி..யா.. என்று மனதுக்குள் அவள் பெயர் ஓட, தொடர்ந்து அவள் முகம் அவன் மூளையில் மின்னி மறைய, ஒரு கண் திறந்து கடிகாரத்தைப் பார்த்தான், சுதர்சன், 23 வயது, கணிப்பொறி பொறியாளர்.
மணி 4:43 என்றது. அது தற்போதய நேரமல்ல, பேட்டரி தன் கடைசி மூச்சைவிட்ட நேரம் என்று புரிய அவனுக்கு சில நொடிகளே தேவைப்பட்டன. கூட கொஞ்ச நேரம் உயிர் வாழ்ந்து 7 மணிக்கு தன்னை எழுப்பிருக்கலாம் என்று கடிகாரத்தை நொந்துகொண்டே அவசரமாக எழுந்தான். அடுத்த 14 வது நிமிடத்தில் தன் பைக்கில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தான். இன்று டீம் மீட்டிங் 9 மணிக்கு. எப்படியும் நேரத்துக்கு போகப்போவதில்லை. ஏற்கனவே மேனேஜரிடம் சுமூகமான உறவில்லை, எப்படியெல்லாம் தனெக்கென்று நிகழ்கிறது என்று தன்னைத்தானே கொண்டான். குறுஞ்சாலை கடந்து அண்ணா சாலையைத் தொட்ட சில நொடிகளில் பசும்பொன் தேவர் சாலையில் உள்ள சந்திப்பில் சிவப்பு சமிக்ஞை அவனை வரவேற்றது. பச்சை சமிக்ஞை கிடைக்க குறைந்தது 8-12 நிமிடம் தவம் கிடக்க வேண்டும். ஊருக்கு தொலைபேசி 10 நாட்கள் ஆகிவிட்ட நினைப்பு, அலுவலகம் பற்றிய சிந்தனை, என்றைக்காவது இந்த இடத்தை நிற்காமல் கடந்ததுண்டா என்ற எரிச்சல் என பல விஷயங்கள் மனதில் ஒரு ஓட்டம் ஓடி மறுபடியும் காவியா-விடம் வந்து நிலைத்தது. காவியா அதே தொழில் நுட்ப பூங்காவில் மற்றொரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவள், நல்ல சிநேகிதி. ஒன்னரை வருடம் பழகிய பிறகு 2 நாட்களுக்கு முன்பு தான் தன் காதலை வெளிப்படுத்தியிருந்தான். காவியாவுக்கு பெரிதாக அதிர்ச்சியில்லை; அவளும் எதிர்பார்த்திருக்ககூடும். இரண்டு நாள் அவகாசம் கேட்டுக்கொண்டாள். அலுவலகத்தில் இருந்து விடுப்பும் எடுத்துக்கொண்டாள். அவளுக்கு இவனைப்போலவே சுந்தர் என்று இன்னொரு நண்பன் உண்டு. அவனைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறாள். அவள் கேட்டுக்கொண்ட 2 நாள் அவகாசம் இந்த இருவரில் ஒருவனை தேர்வு செய்யவே என்பதை சுதர்சன் ஒருவாறாக யூகித்துக்கொண்டான். பச்சை சமிக்ஞை விழ, தன் பைக்கை விரட்டினான். ஓரிரு நிமிடம் தான் போயிருப்பான், போக்குவரத்துக் காவலர் ஒருவர் நிறுத்தி ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்களை சோதனையிட ஆரம்பித்தார். என்ன சோதனை இன்று.. காலை முதலே எதுவுமே சரியில்லையே என்று தன்னையே நொந்துகொண்டான். காவலரிடம் கையிலிருந்த ரூ.200யும் அழுதுவிட்டு அலுவலகம் அடைந்தான். மணி 9.45. மேனஜேரிடம் திட்டு, கையில் ஒரு பைசா இல்லாமல் மதிய சாப்பாட்டிற்கு நண்பனிடம் கடன், நினைத்த வேலையே முடிக்க முடியாமல் மாலை வரை போராடி தலை வலி, மாலை 7 மணிக்கு இன்னொரு மீட்டிங், கஸ்டமரிடம் இருந்து வந்த போன், காவியாவிடமிருந்து வராத போன் என்று அந்த நெடிய கொடிய நாள் முடியாமல் இவனைப்படுத்தியது. ஒரு வழியாக 9 மணிக்கு வீட்டிற்கு வந்து சாப்பிடாமலே படுக்கையில் சரிந்தான். அடிக்கடி கைபேசியை எடுத்துப்பார்த்துக்கொண்டான். இந்த மாதிரி ஒரு துரதிஷ்டமான நாளை தான் கண்டதுண்டா என்று யோசித்துப்பார்த்தான். துவண்டு போயிருந்தான். ஒரு வேளை காவியா தன்னை "நோ" சொல்லிவிடுவாளோ என்ற சிந்தனை அவனை வாட்டியது. ஒரு நொடி அவளை தொலைபேசியில் கூப்பிடலாமா என்று கூட நினைத்தான். பிறகு கண்களை மூடி சில நிமிடம் சும்மா இருந்தான். கைபேசியில் குறுஞ்செய்தி சிணுங்கியது. ஆர்வமாக எடுத்தான். "i love you" என்று வந்திருந்தது. காற்றில் குதித்தான். ஆழமான மூச்சு ஒன்று சுதந்திரமாக வெளியேறியது. உடனடியாக அவள் எண்ணை அழைத்தான்.மறு முனையில் பெண் குரல், "உங்கள் கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் ....". வந்த கோபத்தில் கைபேசியை தூரவிட்டெறிந்தான். இரண்டு அல்லது மூன்று பாகங்களாக சிதறியது. காவியாவின் குறுஞ்செய்திக்குப்பிறகும் துரதிஷ்டம் இன்று இன்னும் தொடர்கிறது என்பதை இவனால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. தரைவழி  தொலைபேசியை அணுகினான்.
மின்னல் வேகத்தில் காவியாவின் எண்ணை அழுத்தி ஹலோ சொல்ல, எதிர்முனையில் உற்சாகமான குரலில் அவள், "சுந்தர் !!??" என்று சொல்ல. "Sorry, wrong number " என்று சொல்லிவிட்டு தொலைபேசியை கீழே வைத்தான். சுந்தர்க்கு அனுப்ப வேண்டிய "i love you"வை தவறுதலாக பெயரொற்றுமையால் தனக்கு அனுப்பிவிட்டாள் என்று புரிந்துகொண்டான். செய்வதறியாது சில நிமிடம் நின்று கொண்டிருந்தான். இலக்கில்லாமல் சுவரை வெறித்துப்பார்த்தான். இதற்கு மேல் இன்று வேறு ஏதும் நடக்ககூடதென்றால் தூங்குவது ஒன்றே ஒரே வழி என்று விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் சரிந்தான். அடுத்த சில நிமிடங்களில் மின் வெட்டு ஏற்பட்டு விசிறி ஓடுவதை நிறுத்த, சென்னையின் தகிக்கும் வெப்பம் அக்கினி நாக்கை நீட்டியது. வெப்பத்தை இவன் உணராத போதும், உடம்பிலிருந்து வியர்வை வெளியேறவே செய்தது.  வியர்வையும், கண்ணீரும் தலையணை நினைத்தன. இவ்வளவையும் தாண்டி அசதியால் அடுத்த 40-50 நிமிடங்களில் தூங்கிப்போனான். அன்றைய மோசமான நாளும் அவனிடமிருந்து வெற்றிகரமாக விடைபெற்றுக்கொண்டது.

பின் இணைப்பு: (கதையை எதிர்மறையாய் முடிக்க விருப்பமில்லாததால், இந்த பின் இணைப்பு...)

காலை மங்கலான வெளிச்சத்தில் சுவர்கடிகாரத்தில் மணி பார்த்தான். ஆறு காட்டியது. பாண்ட்-ஷர்ட் சகிதமாக தூங்கியிருந்தான். நேற்றைய நினைவுகளை அசை போடாமல், அலுவலகம் புறப்படலானான். பளிச்சென்று உடை அணிந்தான். சிதறியடித்த கைபேசியை தேடினான். தேடும் போதே இந்த மாதம் புது கைபேசிக்கு ரூ.10,000 செலவு பண்ண வேண்டியிருக்குமோ என்ற எண்ணம் பயமுறுத்தியது. 3 பாகங்களை இணைத்து உயிர்ப்பிக்க ஆச்சர்யமாக வேலை செய்தது கைபேசி. சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ரீச்சார்ஜ் செய்து கொண்டான். பைக்கை உதைத்து அதன் தூக்கம் கலைத்தான். அலுவலகம் பயணித்தான். 2 நிமிடம் சென்றிருப்பான், ஒரு குறுஞ்செய்தி சிணுங்கியது. வண்டியை ஓட்டிக்கொண்டே கைபேசியை எடுத்துப்பார்த்தான். "hi..have a great day" என்றும், அனுப்பியது ரேகா என்றும் தெரிந்தது. ரேகா, காவியாவைப் போல் இன்னொரு சிநேகிதி. 3 மாதங்களுக்கு முன் ஒரு சின்ன வாக்குவாதத்தில் பேசுவதை நிறுத்திக்கொண்டவள்.. பல குறுஞ்செய்தி அனுப்பியும் மௌனத்தையே பதிலாகத் தந்தவள். இன்று திடீரென்று "hi..have a great day". பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதா வேண்டாமா..? அனுப்புவதென்றால் எப்போது அனுப்புவது..? ஒரு வேளை இவளும் வேறு யாருக்கோ அனுப்பவேண்டியத்தை தனக்கு அனுப்பிவிட்டாளோ? என பல கேள்விகள் முளைத்தன. அவர்கள் நட்பு, அதை தொடர்ந்து வந்த வாக்குவாதம் போன்ற எண்ணங்களும் மனத்திரையில் வேகமாக ஓடி மறைந்தன.. குறுஞ்சாலை கடந்து அண்ணா சாலையைத் தொட்டான். சில நொடிகளில் பசும்பொன் தேவர் சாலையில் உள்ள சந்திப்பை நெருங்கும் போது வலது கால் அனிச்சையாக பிரேக்கை அழுத்தச்சென்றது. அப்போது தான் கவனித்தான் பச்சை சமிக்ஞை அவனை வரவேற்பதை. இவன் கண்களை இவனால் நம்ப முடியவில்லை. இந்த வழியில் தான் இரண்டு வருடங்களாக போகிறான். நினைவில் உள்ளவரை இந்த இடத்தில் பச்சை கிடைத்ததில்லை. இன்று ஒரு அதிசய நாள் தான்... "Yes, this must be a great day", என்று எண்ணிக்கொண்டான். அலுவலகம் சென்றதும் ரேகாவுக்கு பதில் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் என்று நினைத்துக்கொண்டு பைக்கை இன்னும் வேகமாக விரட்டினான்.

புதிரான அழைப்பு

வெளியே கிளம்ப பைக் சாவியைத் தேடிக்கொண்டிருந்த கிரிஷாந்தை அவன் மொபைல் போன் கூப்பிட்டது. எடுத்துப்பார்த்தான். "அப்பா காலிங்..", என்று மொபைல் போன் திரை மிரட்டியது. சில வினாடிகள் திகைத்து செய்வதறியாது நின்றவனை கிச்செனிலிருந்து அம்மாவின் குரல் கலைத்தது. "அங்க என்னடா மொபைலை நோண்டிட்டு இருக்க.. உங்க அப்பாவுக்கு நாளைமறுநாள் ரெண்டாவது வருஷ திதி. ஹோட்டல்ல சாப்பாட்டுக்குச் சொல்லுன்னு நாலு நாளா கத்திட்டு இருக்கேன்.. கொஞ்சமாவது காதுல வாங்குறியா நீ ?"

அதற்குள் போனும் சத்தத்தை தானாகவே நிறுத்தியிருந்தது.  அம்மாவின் குரல் கேட்டோ என்னவோ ?!

குரலில் இலேசான நடுக்கத்துடன், "அ..அ..அங்கதாம்மா கிளம்பிட்டு இருக்கேன்..", என்று ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த பொய்யை பதிலாக கொடுத்தான். அம்மாவிடம் போன் விஷயத்தைப்பற்றி உடனே பேச வேண்டாம் என நினைத்துக்கொண்டான். இன்னமும் அவன் முகம் வெளிறியே இருந்தது. பிரிஜ்ஜை திறந்து சிறிது குளிர்ந்த தண்ணீர் குடித்தான். இவ்வளவு தேடியும் பைக் சாவி இன்று ஏனோ கிடைக்கவில்லை. கிரிக்கெட் பேட் இருந்த உரையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு பைக்கை அடைந்தான். பைக்கின் தலைப்பகுதியில் உள்ள சில வயர்களை இணைத்துப் பிறகு கை கட்டைவிரலால் இரண்டு மூன்று தடவை பைக் ஹாண்டில் பாரில் இருந்த "ஆட்டோ ஸ்டார்ட்" பட்டனை அழுத்தியும் பைக் தேமே என்று இருந்தது. எரிச்சலோடு ஸ்டார்ட்டரை மிதித்தான். நான்கைந்து மிதிகளுக்குப்பிறகு உயிர் மேல் இருந்த ஆசையால் பைக் விழித்துக்கொண்டது. பைக்கில் போகும்போது, "அப்பா காலிங்.." என்று மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தது.

அவனுக்குத்தெரியாது பைக்கில் பிரேக் வயர் அறுந்து போயிருந்தது.

குறிப்பு:
பைக் சாவி கிடைக்காதது, பைக் ஸ்டார்ட் ஆகாதது மற்றும் அவனுக்கு வந்த புதிரான போன் கால் என அத்தனை அமானுஷ்ய சமிக்ஞைகளையும் கிரிஷாந்த் கவனிக்கத்தவறிவிட்டான். கவனித்திருந்தால் அவனும் இன்று நம்மோடு சேர்ந்து இந்த கதையைப் படித்துக்கொண்டிருப்பான். 

திங்கட்கிழமை

நெரிசலான நூறடி சாலையில் கட்டப்பட்டிருந்த அந்த இருபது மாடி அடுக்கு மாடிக்குடியிருப்பில் தோராயமாக நடுப்பகுதியில் லேசாக தீப்பற்றி மெதுவாகப் பரவிக்கொண்டிருந்தது. கட்டிடத்தை சுற்றி ஒரு பரபரப்பு தொற்றியிருந்தது.

எட்டாவது மாடியில் மோகன் தனது அபார்ட்மெண்டிலிருந்து வெளியே வர எத்தனித்துக்கொண்டிருந்தான். தீயணைப்பு வண்டியின் மணியோசை கேட்டுக்கொண்டே இருந்தது. தூங்கிக்கொண்டிருந்த  எட்டு மாத இளையமகனை கையில் ஏந்தியபடி ஹாலை அடைந்தவன் வீட்டுக்குள்ளே இருந்த தன்  மனைவியிடம், "ஷைலு அப்பவே எந்திருச்சுட்டாளே.. இன்னும் என்ன பண்ணிட்டிருக்கீங்க.. வாசல் கதவுல தீ பரவ ஆரம்பிருச்சுருச்சு" என்று கத்தினான்.
மனைவி, "பாத்ரூம்  லாக்கை இவளுக்கு திறக்க தெரியலங்க .. வெளில இருந்து என்னாலயும் திறக்க முடியல..எனக்கு பயமாயிருக்கு ", என்று பதறினாள்.
மோகன், "ஓஹ் மை காட்....", என்று அலறியபடி பாத்ரூம் நோக்கி ஓடினான்.
ஷைலு, "அப்பா...அப்பா...", என்று தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். நூறு முறை திறந்து பழகிய லாக்கை இன்று பயத்தில் அவளுக்குத்  திறக்கத் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட இளையமகன் என்ன நடக்கிறதென்று புரியாமல் இப்போது அழத்தொடங்களினான்.  "இதோ அப்பா வந்துட்டேன்டா...", என்று சொல்லிக்கொண்டே கைக்குழந்தையை மனைவி கையில் கொடுத்துவிட்டு பாத்ரூம் கதவை காலால் பலம்கொண்டமட்டும் உதைத்தான்.  அது திறப்பதாய் இல்லை. ஒரு வினாடி, "பில்டர்ஸ் நல்லாத்தான் கட்டிக்கொடுத்திருக்கான்", என்ற எண்ணக்கீற்று தோன்றி மறைந்தது. திடீரென தீயணைப்பு வண்டி சத்தம் நின்றிருந்தது.  தீயணைப்பு வண்டி அவனுடைய கடைசி நம்பிக்கை. சத்தம் நின்றது அவனுக்கு உச்சபட்ச அதிர்ச்சியைக் கொடுத்தது. அதிர்ச்சியில் அனிச்சையாக, "வண்டி எங்க போச்சு?", என்று கத்தினான். தன்னை மீறி வார்த்தை வெளிவந்தது அப்போது தான் புரிந்தது.
திரும்பிப்பார்த்தான் பக்கத்தில் மனைவி தூங்கிக்கொண்டிருந்தாள், "சே.. கனவா.. நல்லவேளை", என மெலிதாக உச்சரித்ததான்.
அருகில் இருந்த அலாரம் கிளாக்கைப்பார்த்தான். 5:40, திங்கட்கிழமை என்று தன் அசிங்கமான முகத்தை காட்டியது. கனவில் வந்த தீயணைப்பு வண்டிக்கு பத்து நிமிடம் மணி அடித்தது இந்த அலாரம் கிளாக் தான் என்று புரிந்தது ! ஆபீஸ் மீட்டிங், ப்ராஜெக்ட் டெட் லைன், கஸ்டமர் போன் கால் என வரிசையாக எண்ண அலைகள் ஒன்றன் மேல் ஒன்றாய் மேலெழுந்து அவனுக்கு சோர்வை உண்டாக்கின. திங்கட்கிழமை மிரட்டியது. கண்களை மெதுவாக மூடினான், "அந்த கனவே உண்மையாயிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்", என்று யோசித்தபடி.